search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கலெக்டர் அலுவலகம்"

    • கணவர் மற்றும் மகனை இழந்து வாடும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தவாறு மூதாட்டி ஒருவர் பரிதவிப்புடன் மனு கொடுக்க வந்தார். மொத்தம் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்திருந்தார்.

    எனது பெயர் மாரியம்மாள் (வயது 80). கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சுந்தர்ராஜ். ஒரே மகன் செந்தில்குமார். கணவர் மற்றும் மகன் இருவரும் இறந்து விட்டனர்.

    லாரி டிரைவரான செந்தில்குமார் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டான். இதனால் நான் தனியாக வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு எனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்தேன். அப்போது மகன் செந்தில்குமார் பயன்படுத்திய பழைய பை ஒன்றை பார்த்தேன். அதற்குள் ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றேன். ஆனால் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் இந்த ரூபாய் நோட்டுகளை நான் மாற்ற முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகிறேன்.

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனே கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர கோரிக்கை வையுங்கள் என்று கூறினார்கள். அதை கேட்டு நான் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.

    கணவர் மற்றும் மகனை இழந்து வாடும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் கலெக்டர் சமீரனை சந்தித்து அந்த ரூபாய் நோட்டுகளை காண்பித்து அவற்றை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    • சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சண்முகம் என்பவர், மில் தொழிலாளி கோபாலகிருஷ்ணனின் மனுவை முறையாக பெற்று விசாரிக்கவில்லை என தெரியவந்தது.
    • இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை கொடுத்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    அப்போது வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி சோர்வுடன் நடந்து வந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவரது பெயர் கோபாலகிருஷ்ணன் (வயது 35), கோவை இருகூர் ஏ.ஜிபுதூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மில் தொழிலாளியான கோபாலகிருஷ்ணனுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன், சிங்காநல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகார் மனு மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கோபாலகிருஷ்ணன் விஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

    அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.

    சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சண்முகம் என்பவர், மில் தொழிலாளி கோபாலகிருஷ்ணனின் மனுவை முறையாக பெற்று விசாரிக்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.

    • கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளிக்க வந்து இருந்தனர்.
    • அப்போது வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகப்பட்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளிப்பது வழக்கம்.

    இன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளிக்க வந்து இருந்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    அவரை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகப்பட்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    விசாரணையில், அந்த வாலிபர் கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி. புதூரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (வயது40) என்பதும், அவர் வீட்டில் இருந்து பஸ் ஏறும் போது சாணி பவுடர் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோபாலகிருஷ்ணன் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜேக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கோவை மாவட்டத்தில் இந்த மாவட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். இதனால் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி காணப்பட்டது. ஒரு சில அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத்குமார், ஸ்ரீதர், அருணாசலம், இன்னாசி முத்து, மைக்கேல்ராஜ், சாமிநாதன் உள்பட பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து மண்டபங்களில் தங்க வைத்தனர். முன்னதாக மறியல் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9-ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று மாவட்டம் முழுவதில் இருந்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர்- பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து 5 திருமண மண்டபங்களில் அடைத்தனர். #tamilnews
    கோவையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 65 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகங்களில் மின்சார வசதி, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.கோவை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் ஆன்லைன் பணியை புறக்கணித்தனர். பின்னர் கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 12 -வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

    இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் திரண்டனர். அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பிரதிநிதிகளை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் குறித்து மாவட்ட தலைவர் பிரஸ் நேவ், செயலாளர் சரவணன், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் விளக்கி பேசினார். முற்றுகையில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களை போலீசார் கைது செய்தனர். 65 பெண்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். #tamilnews
    கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த வழக்கில் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
    கோவை:

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதானது. இதனை பலர் வரவேற்றனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடும் விதமாக இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 3-ல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
    கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும், குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    கோவை மாவட்ட கலெக்டர் அலவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் இன்னாசி முத்து தலைமையில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று மதியம் மற்றும் இரவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, முன்னாள் மாநில தலைவர் கே.பழனிசாமி, மாவட்ட செயலாளர் என்.பழனிசாமி, நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராஜகோபால், கங்காதேவி, நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று காலையும் சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது:-

    சத்துணவு திட்டம் தொடங்கி 35 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மிகக்குறைவான ஊதியத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே சத்துணவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் 3,200-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுதிமொழி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கோவை:

    தமிழக சபாநாயகர் தனபால் கடந்த மாதம் 6-ந் தேதி பல்வேறு குழுக்களை அறிவித்தார். இதில் சட்டமன்ற உறுதிமொழி குழுவும் ஒன்று ஆகும். இக் குழுவின் ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு சட்ட மன்ற உறுதி மொழி குழு தலைவர் இன்பத்துரை தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், கஸ்தூரி வாசு, கார்த்திகேயன், நந்தகுமார், மனோகரன், ஜெயலிங்கம், சாந்தி ராமு ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு உறுதி அளித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதா? என்பது தொடர்பாக 152 கேள்விகளை கேட்டு இக் குழுவினர் விசாரணை நடத்தினார்கள். 

    கூட்டத்தில் குழு செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் பால சுப்பிரமணியன், கலெக்டர் ஹரி ஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், சப்-கலெக்டர்கள் கார்மேகம், காயத்ரி, மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

    போலீசார் விரைந்து வந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் எனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் என்னிடம் தகராறு செய்து வருகிறார். அவரது வீட்டில் 100 ரூபாய் திருட்டு போய் உள்ளது.

    அதனை நான் தான் எடுத்து விட்டதாக கூறி தகராறு செய்கிறார். மேலும் அடித்து உதைக்கிறார். இதனை தட்டி கேட்டபோது எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.

    எனக்கு யாரும் ஆதரவு இல்லை. எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என போலீசாரிடம் கூறினார்.அவரை சமரசம் செய்த போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    சக்தி சேனா இந்து மக்கள் இயக்க மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மரகதமணி மற்றும் நிர்வாகிகள் கையில் தீபம் ஏற்றி வந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.


    அவர்கள் கொடுத்த மனுவில் தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பிஞ்சு குழந்தைகளை கூட சீரழிக்கிறார்கள்.இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறி உள்ளனர்.

    கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
    கோவை:

    கோவை உக்கடத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(47). டிரைவர். இவரது மனைவி சுகுணா(39). இவர்கள் 2 பேரும் இன்று காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தாங்கள் பாட்டிலில் மறைத்து கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதைப்பார்த்த அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ஓடிச்சென்று அவர்களை மீட்டனர். பின்னர் அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த தண்ணீரை அவர்கள் மீது ஊற்றினர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு ஜெயக்குமாரிடம் தற்கொலைக்கு முயன்றது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது,

    டீக்கடையில் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னிடம் தான் கலெக்டர் அலுவலகத்தில் வேலைபார்ப்பதாகவும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி என்னிடம் பணம் கேட்டார். நான் ரூ.70 ஆயிரம் கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட அவர் வேறு யாராவது இருந்தாலும் சொல்லுங்கள். அவர்களுக்கும் வீடு வாங்கி தருகிறேன் என்றார்.

    இதையடுத்து நான் எனக்கு தெரிந்தவர்களிடம் ரூ.12 லட்சம் வரை வசூல் செய்து அந்த நபரிடம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் உங்கள் அனைவருக்கும் விரைவில் வீடு கிடைக்கும் என்று கூறினார். இதற்கிடையே நீண்ட நாட்கள் ஆனதும் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் வீடு கேட்டு வந்தனர். இதையடுத்து நான் அந்த நபரை தேடி டீக்கடைக்கு சென்றேன். அப்போது அவர் அங்கு வருவதை நிறுத்திக்கொண்டார்.

    அவர் பெயர் விவரம் எதுவும் தெரியாததால் அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து என்னிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். அந்த மோசடி நபர் குறித்து உக்கடம் போலீசில் நான் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றோம் என்றார்.

    தொடர்ந்து அந்த மோசடி நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆண் குழந்தையை விட்டு சென்ற தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு தொட்டில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்படி தொட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.30 மணியளவில் இந்த தொட்டிலில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த அலுவலர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக தொட்டிலில் இருந்த குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்தார்.

    டாக்டர்கள் குழந்தையை சோதனைசெய்த போது பிறந்து 20 நாட்களே ஆன ஆண்குழந்தை என்பதும், குழந்தை 1¾ கிலோ எடையில் காணப்பட்டது. எடை மிகவும் குறைவாக இருந்ததால் குழந்தை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதனையடுத்து டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்ற மர்மநபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு தம்பதி கையில் குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதும், சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்கள் கையில் குழந்தை இல்லாமல் வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து குழந்தையை வீசி சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    ×